Monday, 20 April 2015

மைதா எனும் அரக்கன்

மைதா எனும் அரக்கன்

 நர்கிஸ் அண்ணா எம்.சேக் அப்துல்லா



சிலருக்கு பரோட்டா சாப்பிட்டால்தான் தூக்கமே வரும். அந்த அளவுக்கு பரோட்டாவுக்கு அடிமையானவர்கள் பலர் நம்மில் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அதன் சுவை தான். இதையே பல ஊர்களில் பலவிதமாகச் செய்கிறார்கள். மதுரை பக்கம் போனால் சும்மா மெத்மெத்தென்று அடித்த மாவில் செய்த சுவையான பரோட்டா கிடைக்கும். விருதுநகர் பக்கம் சென்றால் எண்ணெயில் சுட்ட பொறித்த பரோட்டா கிடைக்கும். அப்படியே செங்கோட்டை பார்டர் கடைக்குச் சென்றால் கோழிக்குழம்புடன் அள்ளி அள்ளி விழுங்கத் தோன்றும் சுவையான பரோட்டா கிடைக்கும். இப்படி ஒவ்வொரு பரோட்டா பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.
 

  பரோட்டாவுக்கு பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது பரோட்டா வரலாறு அல்ல. அதை செய்யப் பயன்படும் மைதாவுக்கான வரலாறு. மைதா என்றொரு பொருள் ஆங்கிலேயர்களால்தான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதற்கு முன்பு வரையில் இந்தியாவில் கோதுமையில் பயன்பாடுதான். அதில்தான் ரொட்டி சுடுவது சப்பாத்தி சுடுவது எல்லாம். தனிக்காட்டு ராஜாவாக இந்தியாவில் கோதுமை கோலோச்சிக் கொண்டிருந்தபோது அதற்கு ஆப்பு வைத்தது இரண்டாம் உலகப்போர். போர் வீரர்களுக்கு பெருமளவில் கோதுமை தேவைப்பட்டது. இதனால் கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கோதுமைக்கு மாற்றுப் பொருளை கண்டறியும் முயற்சி தீவிரமானது. அப்போது அறிமுகமானதுதான் மைதா. அதாவது மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட மாவுடன் சில ரசாயனங்களையும் சேர்மானங்களையும் சேர்த்து தயாரிப்பதுதான் மைதா. இந்த மைதா மிக எளிதாக உருட்டவும் மாவு பிசையவும் வந்தது. கோதுமையைக் காட்டிலும் விலை குறைவாக இருந்தது. இதனால் மக்களிடம் எளிதில் மைதா புகழ் பெறத் தொடங்கியது. குறிப்பாக ஏழை மக்களின் உணவுப் பொருளாக மைதா பிரபலமானது. அதுவே படிப்படியாக வளர்ச்சி பெற்று நாகரீக உணவு பொருளாகியது.

  இதுதான் மைதா அரக்கனின் வரலாறு. மைதாவின் மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கு மாவு என்பது சற்று பழுப்பு நிறம் கொண்டது. இதை வெளுக்க வைத்து வெண்மையாக மாற்றுவதற்காக அதில் பென்சாயில், பெராக்சைடு என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது. சாதாரணமாக சொன்னால் ரசாயனம். இதை இன்னும் மேலும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தலைமுடிக்கு அடிக்கும் டையில் உள்ள ரசாயனம் என்று கூறினால் நன்கு விளங்கும். இந்த ரசாயனத்தால் சில அரிப்பு ஒவ்வாமை ஏற்படுகிறது. தலைமுடிக்கு இந்த நிலைமை என்றால் உடலில் சென்றால் … சொல்ல வேண்டியதே இல்லை. மெல்லக் கொல்லும் விஷமாக பல பாதிப்புகளை இது செய்து வருகிறது. நீரிழிவு என சொல்லப்படும் டயாப்டிக்ஸ் நோய்க்கு அடிக்கல் நாட்டும் விழாவாக மைதா ஆகிவிடும்.
  ‘அலாக்ஸான்’ எனும் ரசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. வெண்மை என்றால் சாதாரண வெண்மையா என்ன? மைதாவின் வெண்மையை ஊரே போற்ற வேண்டும் என்பதற்காக அதில் செயற்கை வண்ணப்பொடியும் கலக்கப்படுகிறது. பரோட்டாவுக்கு சுவை சேர்க்க வேண்டாமா? இதற்காக உணவு எண்ணெய்கள், சுவை கூட்டிகள் எனப்படும் டேஸ்ட் மேக்கர்ஸ், மைதா நீண்ட நாட்கள் பூஞ்சை பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்க தேவையான ரசாயனங்கள் (பிரசர் வேடீவ்ஸ்) அஜினோ மோட்டோ, இனிப்பு பொருட்களில் சாக்ரின் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

  கடைகளில் விற்கப்படுகின்ற பரோட்டா மாவாகப் பிசைந்து சில மணி நேரங்கள் எண்ணெயில் ஊற வைக்கப்படுகிறது. அது எந்தவகையான எண்ணெய் என்பது மாஸ்டருக்கு மட்டுமே தெரியும். பின்னர் அதை எடுத்து உருண்டைகளை சுற்றி தட்டும்போதும் எண்ணெய் ஊற்றப்படுகிறது. அவ்வாறு எண்ணெயில் குளிப்பாட்டிய பரோட்டாவை எடுத்து சுடும்போது ஊற்றப்படும் எண்ணெய்க்கு அளவே இல்லை. இதில் சுவைக்காகவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படும் மட்ட ரகமான நெய் அல்லது டால்டாவில் பொரித்து எடுக்கப்படும் பரோட்டாவை சாப்பிட்டால் ஏற்படுகின்ற தீங்கான விளைவுகளை சொல்லவே அச்சமாக உள்ளது. இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் உட்புறம் படியும் கொழுப்பாக மாறி ஹார்ட் அட்டாக் ஏற்பட வழிவகுத்து விடுகிறது. ஹார்ட் அட்டாக், கிட்னி பெயிலியர், டயாபடீஸ் என்று விதவிதமான நோய்களை வரவழைக்கும் மைதாவில் எவ்வித பயனும் இல்லை என்பதால்தான் ஐரோப்பிய யூனியனும், கனடாவும் இதற்கு தடை விதித்துள்ளது.

  இந்த பரோட்டாவுக்கு சைட்டிஸ் என்ன தெரியுமா? கோழி குருமா, சிக்கன் 65! முன்பெல்லாம் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழி கறி சமைத்து உண்பார்கள். அதில் நல்ல சத்தும் இருந்தது. இப்போது பிராய்லர் சிக்கன் வந்துவிட்டது. பிராய்லர் கோழியை உணவாக உட்கொள்ளும் இந்தியர்களில் நூற்றில் 65 பேருக்கு கல்லீரல் வீக்க நோய் இருப்பதாக சென்னை மருத்துவ ஆய்வுக் குழு ஒன்றின் குடல் நோய் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்டதுதான் பிராய்லர் கோழிகள். அதற்குள் எடை கூட்டி வளர்க்க பயன்படுத்தப்படும் ரோக்ஸார்ஜோன் என்ற ஹார்மோன் ஊசிகள், மனிதர்களுக்கு புற்றுநோயை ஊக்குவிக்கும் தன்மை வாய்ந்தவை. கோழிகளுக்கு செலுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் ரசாயனங்கள், கோழியின் கறியிலும், கல்லீரலிலும், சிறுநீரகங்களிலும் தேங்கி விடுகின்றன. சிக்கன் 65 தயாரிக்கப் பயன்படும் சிவப்பு நிற கலர் பவுடர் புற்று நோயினை ஏற்படுத்தும். வேதியப் பொருள்களும் இதய நோய்க்கு வித்திடுகின்றன. இத்தகைய அபாயகரமான நோய்களை ஏற்படுத்தும் பரோட்டாவையும், சிக்கன் குழம்பு, சிக்கன் 65 ஆகியவற்றினை சாப்பிட்டு நோயினை விலைக்கு வாங்க வேண்டுமா? என்பது நான் உன் முன்பாக வைக்கின்ற கேள்வி?

  நாட்டுக் கோழிகளின் பிறப்பும், வளர்க்கப்படும் முறைகளும், பிராய்லர் கோழிகளின் பிறப்பும், வளர்க்கப்படும் முறைகளும் வெவ்வேறு விதமே 

நன்றி :
நர்கிஸ் – மார்ச் 2015



Thursday, 9 April 2015

நீராடுதலின் நியமங்கள்



நீராடுதலின் நியமங்கள்

நீராடுவதால் உடல் தூய்மை, ஆண்மை, நீண்ட ஆயுள் இவை
ஏற்படுகின்றன. களைப்பு, அழுக்கு, வியர்வை இவை நீங்குகின்றன உடல் வலிவு, ஓஜஸ் (ஒளி) இவை வளர்கின்றன.
- சரகசம்ஹிதை
தண்ணீரில் குளிப்பது என்பது மனிதனுடன் கூடப் பிறந்த ஒரு இயற்கை உணர்வு. காலம் செல்ல, செல்ல குளிப்பது ஒரு புனித சடங்காக மாறியது. கோவில்களுக்கு செல்லும் முன்பு, பூஜைக்கு முன்பு குளிப்பது தவிர உணவு உண்பதற்கு முன் குளிப்பது இவை வழக்கமாகிவிட்டது. வெறும் தண்ணீரில் முங்கி எழுவது போய், தோலை தேய்க்க சோப்பு போன்றவற்றை உபயோகிப்பது, எண்ணை தேய்த்து குளிப்பது இவையெல்லாம் நாகரிக மாற்றங்களாயின.
அழுக்கு வெளிப்புற தும்பு, தூசிகள், புழுதி இவற்றால் ஏற்படுகிறது. தவிர மனிதத்தோலும் உடல் கழிவுப்பொருட்களை வெளியேற்றும் ஒரு அவயம் தான். தோலின் அடியில் உள்ள மயிர்கால்களை சுற்றி, கொழுப்பு சுரப்பிகள் உள்ளன. இவை மயிர்கால் துவாரங்களின் மூலம் தோல் மேல் வருகிறது. இந்த சுரப்பினால் தான் தோல் வரண்டு போகாமல், மழுமழுப்பாக இருக்கிறது. அதிக சீபம் சுரந்தால், அது தோலின் மேல் படிந்து விடுகிறது. தவிர தோலின் ‘இறந்த’ செல்களும் வியர்வை கசண்டுகளும் மேல் சேர்ந்து விடும் – இவற்றை நீக்க குளிப்பது அவசியம். மனிதனால் பாம்பு சட்டையை உரித்து விட்டு போவது போல், தோலை கழற்றி விட முடியாது. எனவே இருக்கும் தோலை சுத்தமாகவும், சுகாதாரமாக வைக்க குளியல் அவசியம். அதுவும் வெய்யில் காலத்தில் ஒரு முறை குளியல் போதாது. இரு முறையாவது குளிக்க வேண்டும். சரிவர குளிக்காவிட்டால் உடலில் துர்நாற்றம் ஏற்படும். ரோமங்கள் அதிகம் உள்ள இடங்களில் துர்நாற்றம் அதிகமிருக்கும்.
குளியலுக்கு ஏற்ற நாட்கள்
சாஸ்திரங்கள் ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணை நீராடுவது உசிதம் என்கின்றன. காரணம் சனி அசதி, சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி எண்ணெய் குளியல் முடிந்த பின் மனிதனின் சுறுசுறுப்பு குறைந்து அசதியும், உறக்கமும் ஏற்படும். விரைந்த செயல்பாடுகள், சடங்குகள், மங்கல நிகழ்ச்சிகள் சனிக்கிழமைகளில் செய்வது வழக்கமில்லை. எனவே ஓய்வை உண்டாக்கும் எண்ணை குளியலை சனியன்று செய்வது நல்லது.
பெண்களுக்கு சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை. செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள். எனவே இந்தக் கிழமைகளில் பெண்கள் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.
எண்ணை குளியல்
சர்ம பாதுகாப்பில் சிறந்த சிகிச்சை – தோலுக்கு எண்ணை பதமிடுவது. குளிப்பதாலும், எண்ணை குளியலாலும் ஏற்படும் நன்மைகள்
உடல் சூடு, காங்கை குறைகிறது.
முன்பு சொன்னது போல், சருமம் மிருதுவாகிறது. அதற்கு எழிலையும், போஷாக்கையும் கூட்டுகிறது.
இளநரையும், பொடுகும் தவிர்க்கப்படும்.
தலை முடி கருத்து நீளமாக வளரும்.
நல்ல தூக்கம் வரும்.
கண்ணெரிச்சல் குறையும்.
குளியலுக்கு ஏற்ற நீர்
பொதுவாக, வெதுவெதுப்பான, இதமான நீர் அனைவருக்கும் ஏற்றது. கோடையில் குளிர்ந்த நீரால் குளிப்பது. சுறுசுறுப்பை உண்டாக்கும். எனவே தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு தண்ணீரை விட வெந்நீர் உசிதமானது. சுடுநீர் மன இறுக்கத்தை குறைத்து தூக்கத்தை உண்டாக்கும். தலைக்கு மிதமான குறைவான சூடுடைய நீர் (அ) தண்ணீரும், கழுத்துக்கு கீழ் சுடுநீரையும் விட்டுக் கொள்வது நல்லது. இதற்காக தனித் தனி வாளி பாத்திரத்தை உபயோகிக்கலாம்.
ஆயுர்வேத ஆசான்களில் ஒருவரான வாகபட்டர் கூறுவது – “வெந்நீரால் கழுத்துக்கு கீழ் ஸ்நானம் செய்வது பலத்தைத் தரும். வெந்நீரை தலைக்கு ஊற்றிக் கொள்வது கண்களுக்கும் கேசத்திற்கும் இதமல்ல”.
மிகவும் குளிர்ந்த நீர், மிகவும் சூடான நீர் இரண்டும் கூடாது. பருவ காலத்திற்கேற்ப, உடலுக்கு ஏற்ற, சரியான சூடு குளிர்ச்சி உள்ள நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். குளிர்காலத்தில் அதிக சூடான நீர் சுகமாக இருக்கலாம். ஆனால் அது உடலின் தாதுப் பொருட்களை அகற்றி விடும். தலையில் நீர்க்கோவை, உடல் வலி உள்ளவர்கள், குளிர் தாங்க முடியாதவர்கள், வெந்நீரில் குளிப்பதே நல்லது. கடுமையான கோடைகாலத்தில் வெந்நீரில் குளித்தால் பித்தம் அதிகமாகும். சர்மத்தில் சினைப்பு, தடிப்பு ஏற்படும்.
தவிர வெந்நீரை பாத்திரத்தில் பிடித்து வைத்து அதை நமக்கு ஏற்ற சூட்டுக்கு ஆற வைத்து குளிப்பது நல்லது. சூடான நீரில், தண்ணீரை ஊற்றி விளாவுவதை தவிர்க்கவும்.
தினமும் இரு வேளை குளிப்பவர்கள் காலையில் தண்ணீரிலும் இரவில் வெந்நீரிலும் குளிப்பது நல்லது. தண்ணீர் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். இரவில் வெந்நீர் தூக்கத்தை தரும்.
தினமும் குளிக்கும் போது சிறிது எண்ணையை உச்சந்தலையில் வைத்து குளிப்பது நல்லது. சைனஸ், ஜலதோஷம், காதுவலி, தலைவலி, கண்வலி உள்ளவர்கள், இந்த உபாதைகளின் போது, தலைக்கு குளிக்க வேண்டாம்.
நீராடுதலின் நியமங்கள்
உணவுக்கு முன்பு தான் குளிக்க வேண்டும். உணவு உண்டவுடனே குளிப்பதால், தோலின் தட்ப வெப்ப நிலை மாறும். ஜீரணம் பாதிக்கப்படும். எனவே குளிக்கும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.
குளித்த பின் தூய்மையான ஆடைகளை அணியவும். குளிக்கு முன் போட்டிருந்த ஆடைகளை திரும்பி அணிய வேண்டாம்.
ஜலதோஷம், பீநசம், நெஞ்சில் கபம் கட்டியிருப்பது, பேதி, கண் மற்றும் காது நோய் இருக்கும் போதும், குளிப்பதை தவிர்க்கவும். தேவைப்பட்டால், கழுத்துக் கீழே ஸ்பான்ஜ் குளியல் எடுத்துக் கொள்ளலாம்.
குளித்த பின் ஈர ஆடைகளுடன் அதிக நேரம் இருக்க வேண்டாம்.
ஈரமான தலையில் எண்ணை தடவுவது, சீப்பால் வாருவது கூடாது. முடிகள் உடைந்து விடும்.
குளித்த பின் உடல், தலை ஈரம் போக நன்றாக துவாலையால் துடைத்துக் கொள்ளவும்.
அதிக நேரம் குளிக்க வேண்டாம்.
உடலை அளவுக்கு மீறி தேய்த்து குளிக்க வேண்டாம்.
வெதவெதப்பான நீர் சூடான நீரை விட, குளிப்பதற்கு நல்லது.
உங்கள் உடலில் வியர்வை அதிகம் வெளியானால், குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
எண்ணெய்க் குளியலின் போது, குளிக்கும் தண்ணீரில் வெட்டி வேர் அல்லது பன்னீர் சேர்த்து கொள்ளவும்.
எண்ணை குளியலின் பயன்கள் – சரகசம்ஹிதை சொல்வது
எண்ணெய் பூசிய (ஊறிய) குடம், எண்ணெயில் ஊறிய தோல், எண்ணெய் ஊற்றிய வண்டிச் சக்கரம் இவை பலம் உள்ளவைகளாகவும், சுமை சுமப்பதற்குத் தகுதியுள்ளவைகளாகவும் ஆவன போல் உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு உறுதியையும், தோலுக்கு மழமழப்பையும் அளிக்கிறது. வாத தோஷத்தினால் தோன்றுகின்ற வேதனைகளைத் தணியச் செய்து, துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையையும், உடற்பயிற்சிக்குத் தேவையான சக்தியையும் அளிக்கிறது.
தொடு உணர்ச்சியில் வாயு அதிகமாக இருக்கிறது. தொடு உணர்ச்சிக்குத் தோல் இருப்பிடமாகும். எண்ணெய் வாத தோஷத்தை நீக்குவதில் சிறந்தது. உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தோலுக்கு நன்மையை அளிக்கிறது. ஆகையால் நாள்தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
நாள்தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பவனுடைய உடலில் காயம் ஏற்பட்டாலும் கடுமையான உழைப்பிலும் அவனுடைய தோலில் மாறுபாடு ஏற்படுவதில்லை. நாள்தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பவனுடைய சருமம் மிருதுவாகவும், பார்ப்பதற்கு அழகுள்ளதாகவும் ஆகிறது. வலிவு உள்ளதாகவும், முதுமையிலும் அதன் இலக்கணம் முழுவதும் வெளிப்படாமல் சிறிதளவே தென்படுகிறது.
தோலில் தேய்த்த எண்ணெய் உள்ளே பரவும் வேகம்
ஆயுர்வேத ஆசானான சுச்ருதர் சொல்வது – மொத்தம் 25 நொடிகளில் எண்ணெய்யின் வழவழப்பும், நெகிழ்ச்சியும் உடலின் உள்ளே பரவி விடும் என்கிறார் இந்த வேகம் மனிதருக்கு மனிதர் மாறுபடலாம். உடலில் எண்ணெய் தேய்த்தவுடன் 11/2 நொடிகளில் மேல் தோலிலும், அடுத்த 2 நொடிகளில் உள் தோலிலும் ஊடுருவி விடும்.
அடுத்து வரும் நொடிகளில் தசை, எலும்பு, மஜ்ஜை இவற்றை சென்றடைந்துவிடும்.
எண்ணை குளியலின் சில நியமங்கள்
எண்ணைக் குளியலுக்கு உகந்தது நல்லெண்ணை.
எண்ணையை காய்ச்சி தேய்த்துக் கொள்ள வேண்டும்.
காய்ச்சும் போது மிளகு, ஒமம், வெந்தயம், இஞ்சி போட்டு காய்ச்சினால் உடலுக்கு வலிமை ஏற்படும். சளி பிடிக்காது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், கொம்பரக்கும் சேர்த்துக் கொள்ளலாம். இது உடற் காங்கையை குறைக்கும்.
எண்ணைக் குளியலை வெந்நீரில் தான் செய்ய வேண்டும்.
எண்ணை தேய்த்து குளித்த அன்று, உடலுறவு கூடாது.



Wednesday, 8 April 2015

அக்குபங்சர் சிகிச்சை பெறுவோர் புரிந்து பின்பற்ற வேண்டியவை.

அக்குபங்சர் சிகிச்சை பெறுவோர் புரிந்து பின்பற்ற வேண்டியவை



Ø அக்குபங்சர் ஓர் அறிவியல் பூர்வமான சிகிச்சை முறையாகும். 


Ø உடலின் உள்ளுறுப்புக்களில் தேக்கமடையும் கழிவுகளும், சக்தி ஓட்டப்பாதையில் ஏற்படும் தடைகளுமே நோய்களாகும். அவற்றைக் களைய தோலின் மேற்பகுதியில் அமைந்துள்ள அக்குபங்சர் புள்ளிகளைத் தூண்டுவதே சிகிச்சையாகும்.


Ø சிகிச்சை பெறுவோர் உடலோடு ஒத்துழைக்க வேண்டும். பசி, தாகம், ஓய்வு, தூக்கம் ஆகியவற்றை ஏற்று பின்பற்ற வேண்டும். 


Ø  பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசி இல்லாமல் சாப்பிடக் கூடாது. அதே சமயம் பசி எடுத்தால் சாப்பிடுவதைத் தள்ளிப் போடக்கூடாது. பசி இல்லை என்றால் ஒரு வேளை பட்டினியாய் இருந்து ஓய்வெடுத்துக் கொள்வது அடுத்த வேளை பசியை தூண்டி விட ஏதுவாய் இருக்கும்.


Ø சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிடவேண்டும்.


Ø உணவை நன்றாக மென்று, ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும். உணவானது வாயிலேயே சுவை முழுவதும் நீக்கப்பட்ட நிலையில் வெறும் சக்கையாக விழுங்கப்பட வேண்டும்.


Ø சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பும், பின்பும் சாப்பிடும் போது இடையிலும்  நீர் அருந்தக் கூடாது. விக்கல் ஏற்பட்டால் தொண்டை நனையும் அளவுக்கு மட்டும் சிறிது தண்ணீர் குடித்துக் கொள்ளலாம். 


Ø இரவு உணவை ஏழு மணியிலிருந்து எட்டு மணிக்குள் சாப்பிடுதல் நல்லது. மாலை வேளையில் எந்தவித நொறுக்குத் தீனிகளும் சாப்பிடாமல் இருந்தால் இரவு எட்டு மணி வாக்கில் பசி தானாகவே ஏற்படும். கல்லீரலைக் கொண்டு நச்சுக் கழிவுகளை முறிக்க முடிந்தவரை எளிதில் ஜீரணமாகும் பழங்கள், கஞ்சி போன்றவற்றை இரவு உணவாகக் கொள்ளலாம்.


Ø அந்தந்த பருவத்தில் கிடைக்கும் இனிப்பான பழங்களை உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்கள் எளிதில் ஜீரணமாகி கழிவுகள் வெளியேற்றும் பணியை துரிதப்படுத்தும்.


Ø தாகம் இருந்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.தாகம் தணிகிறவரை மட்டும் குடித்தால் போதுமானது.


Ø  அண்ணாந்து மடமடவென தண்ணீரை விழுங்காமல், கீழுதடு நனையும் வகையில், மெதுவாக சப்பி, ரசித்து,ருசித்து குடிக்க வேண்டும்.

Ø  கொதிக்க வைத்த தண்ணீர், பில்டர் தண்ணீர், மினரல் வாட்டர் போன்றவற்றை தவிர்த்து மண்பானை அல்லது செப்பு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை குடித்தல்  சிகிச்சையை துரிதப்படுத்தும்.
 
Ø  நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்க வேண்டும். இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தூக்கம் மிகவும் அவசியம்.


Ø  அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும்  நோயின் வெளியேற்றம் ஆகும். தொந்தரவுகள் குறைவது, அதிகமாகிப் பிறகு குறைவது, இடம் மாறுவது போன்றவை நல்ல அறிகுறிகள் ஆகும். 


Ø  இது வரை தங்கியிருந்த கழிவுகள் காய்ச்சல்,வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, சளி, தூக்கம் போன்றவை மூலம் வெளியேற்றப்படும்.  இதற்காக பயப்பட வேண்டியதில்லை. இவற்றை தொந்தரவுகளாக கருதாமல், கழிவு வெளியேற்றப்படுவதற்கு சிகிச்சை நடைபெறுவதாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் பிற மருந்துகள், இரசாயன பொருட்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது. அவசியமெனில் சிகிச்சை அளித்த அக்குஹீலரைத் தொடர்பு கொள்ளலாம்


Ø  சிகிச்சை பெறுவோர் கண்டிப்பாக டீ, காபி, பால், தயிர், சீனி எனப்படும் அஸ்கா சர்க்கரை  மற்றும் அதிக புளிப்பு தரும் உணவுகளை தவிர்க்க வேண்டும். இது செரிமானத்தை சீராக்கும். எளிதாக்கும். பால் கலக்காத டீ, காபி, கருப்பட்டி காபி, சுக்கு காபி, காய்கறி சூப், கீரை சூப், ஆட்டுக்கால் சூப் போன்றவற்றை அருந்தலாம்
.

Ø  மது, புகை, ரசாயன மருந்துகள் போன்றவற்றை சிகிச்சை  தொடங்கிய உடனேயே நிறுத்தி விட வேண்டு்ம். பராமரிப்பு மையமான கல்லீரலை இவை பாதிக்கின்றன. அதனால் நலமடைதல் தாமதமாகும். 


Ø  ஒரு நாளைக்கு இரு முறை மலம் கழித்தல் ஆரோக்கியம். அக்குஹீலரின் ஆலோசனையுடன் வாரம் இருமுறை நல்லெண்ணெய் குளியல், வருடம் இருமுறை பேதிக்கு சாப்பிடுதல் நலம் தரும்.


Ø  கவலையும், மன உளைச்சலும் ஜீரணத்தை பாதிக்கும். அதனால் உணவு மூலமாக கிடைக்கும் உயிரோட்டம் பாதிக்கப்படும். எனவே எந்த அளவுக்கு கவலை, மன உளைச்சல் இல்லாமல் இருக்கிறோமோ, எந்த அளவுக்கு உடல் சொல்வதை கேட்டு முழு நம்பிக்கையுடன் நடக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் இறைவன் நாடியபடி உடல் நோய்கள் விரைவில் குணமாகும்.
 
              -    இராணிப்பேட்டை அக்குபங்சர் அகாடமி 
 

Monday, 6 April 2015

கால்களில் சக்தி நாளங்கள்

கால்களில் சக்தி நாளங்கள்:

அக்குபங்சர்  சிகிச்சைக்கு சக்தி நாளங்கள் பற்றிய ஞானம் மிக முக்கியமானது
இதைக் கொண்டுதான் நோயை அறியவும், நோயாக இருக்கும் கழிவுகளை நீக்கவும் சிகிச்சை தரப்படுகிறது.
மூன்று ராஜ உறுப்புக்களின் சக்தி நாளங்களும், மூன்று துணை உறுப்புக்களின் சக்தி நாளங்களும் இரு கால்களிலும் அமைந்துள்ளன.
அவற்றை கீழே காணும் படத்தின் மூலம் காட்டப்படுகிறது .




சக்தி ஓட்டப்பாதையும், அதில அமைந்துள்ள பஞ்ச பூதப் புள்ளிகளையும்  படத்திலும், அட்டவணையிலும் காட்டப்பட்டுள்ளது.

தேவைப்படுவோர் உபயோகித்துக் கொள்ளலாம்

Sunday, 5 April 2015

கைகளில் சக்தி நாளங்கள் :

 கைகளில் சக்தி நாளங்கள் :

அக்குபங்சர்  சிகிச்சைக்கு சக்தி நாளங்கள் பற்றிய ஞானம் மிக முக்கியமானது
இதைக் கொண்டுதான் நோயை அறியவும், நோயாக இருக்கும் கழிவுகளை நீக்கவும் சிகிச்சை தரப்படுகிறது.
மூன்று ராஜ உறுப்புக்களின் சக்தி நாளங்களும், மூன்று துணை உறுப்புக்களின் சக்தி நாளங்களும் இரு கைகளிலும் அமைந்துள்ளன.
அவற்றை ஒரு படத்தின் மூலம் விளங்க வைக்க இங்கே பிரசுரிக்கப்படுகிறது.
சக்தி ஓட்டப்பாதையும், அதில அமைந்துள்ள பஞ்ச பூதப் புள்ளிகளையும்  படத்திலும், அட்டவணையிலும் காட்டப்பட்டுள்ளது.

கற்றுக் கொள்ளும் நிலையில் இந்தப் படம் உபயோகமாக இருக்கும்